Tuesday, 10 December 2024

நாளை முதல் எச்சரிக்கையாக இருங்கள்; வானிலை ஆய்வாளர் தகவல்

 10.12.2024 செவ்வாய்க்கிழமை இரவு 11.00 மணி. 


தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாற்றமடைந்து (Well Marked Low Pressure System) தற்போது மட்டக்களப்பிலிருந்து கிழக்காக 325 கி.மீ. தொலைவில் அதன் மையம் காணப்படுகின்றது. இது மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து (அதன் உள் வளையம் வடக்கு மாகாணத்தினை உள்ளடக்கியதாக நகர்ந்து) மன்னார் வளைகுடாவுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது ( நகர்வுப் பாதை மாற்றத்திற்கு உட்படும்)

இதன் உள் வளையத்தின் தென்னரைப்பகுதி வடக்கு மாகாணத்தினூடாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் நாளை இரவு முதல்(11.12.2024) எதிர்வரும் 14.12.2024 வரை நாம் அனைவரும் சற்று எச்சரிக்கையாக இருப்பது அவசியம். 

நாம் எச்சரிக்கையாக இருந்து பாதிப்புக்கள் இல்லை என்றால் நாம் இழக்கப்போவது எதுவுமில்லை. ஆனால் அசட்டையாக இருந்து பாதிப்புக்கள் இருந்தால் அதனை இலகுவாக நிவர்த்திக்க முடியாது. 

நாம் அச்சம் கொள்ள தேவையில்லை. ஆனால் அலட்சியமாக இருக்காது சற்று அவதானமாக இருப்பது அவசியம். 

இது மழைக்காலம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் வடக்கு மாகாணத்தின் ஆண்டுச் சராசரியான 1240 மி.மீ. இனை விட 705 மி.மீ. அதிகமாகக் கிடைத்து உள்ளது. கிழக்கு மாகாண ஆண்டுச் சராசரியான 1850 மி.மீ. இனை விட 580 மி.மீ. கூடுதலாக கிடைத்துள்ளது. இதனால் 24 மணித்தியாலத்தில் 100 மி.மீ. இற்கு மேல் மழை கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அது யாழ்ப்பாண நகரம், கிளிநொச்சி நகரம், மன்னார் தீவு போன்ற தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அனர்த்தத்தினை உருவாக்கும். 

பொதுவாக விளக்கீட்டு காலப்பகுதியில்( கார்த்திகை தீபம்) நிச்சயமாக மழை கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இம்முறையும் அந்த நம்பிக்கை உண்மையாகும். 

இதன் காரணமாக இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தொடங்கியுள்ள மழை எதிர்வரும் 14.12.2024 வரை தொடரும் வாய்ப்புள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு பரவலாக கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. எனினும் ஒரு சில இடங்களில் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை பகுதிகளுக்கு கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 

வடக்கு (யாழ்ப்பாணம்), கிழக்கு(கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை), வட மேற்கு (மன்னார், புத்தளம்) தென்கிழக்கு(அம்பாந்தோட்டை ) கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் எக் காரணம் கொண்டும் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம். 

இன்று இரவு முதல் திருகோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 கி.மீ. இனை விட அதிகமாக இருக்ககூடும். 

இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையின் கரையைக் கடக்கும் இடம் தெளிவாக அறிந்த பின் மேலதிக விபரங்கள் இற்றைப்படுத்தப்படும். 

- நாகமுத்து பிரதீபராஜா-

Monday, 9 December 2024

திருவிளையாடற் புராணம் உணர்த்தும் கருத்து

 திருவிளையாடல்

**************************
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.
-இறையனார்.(குறுந்தொகை)
தவறான பாடலுக்குப் பரிசளிக்க இருந்தோமே எம்மைக் காத்தீர் என்று மகிழ்ந்தான் மன்னன்.
கோயிலில் தமக்கு நேர்ந்த இழிவை எண்ணி வருந்திய தருமி முன்னர் தோன்றிய சிவன், தருமியை அழைத்துக்கொண்டு பாண்டியனின் அவைக்கு வந்தார். அவையில் நடந்த விவாதம்,
(மூல புராணத்தையும், திருவிளையாடல் புராணம் என்னும் படத்தின் வசனங்களையும் தழுவி,)
சிவன் - எனது பாடலில் பிழை கண்டவன் எவன்?
நக்கீரர் - அவன் இவன் என்ற ஏக வசனம் வேண்டாம்.
சிவன் - ஓ நக்கீரனா? சங்கைக் கீறு கீறு என்று அறுத்து வளையல் செய்யும் நக்கீரனா எனது பாடலில் குற்றம் காணத்தக்கவன்.
நக்கீரர் - சங்கறுப்பது எங்கள் தொழில். சங்கரனாருக்கு என்ன தொழில்.
அரனே அறுந்துண்டு வாழ்வோம். உன்போல் இரந்துண்டு வாழ்வதில்லை.
சிவன் - எமது பாடலில் என்ன குறை கண்டீர்? சொல்லிலா? பொருளிலா?
நக்கீரர் - சொல்லிலிருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். பிழை பொருளில்.
சிவன் - பொருளில் என்ன பிழை கண்டீர்?
நக்கீரர் - பாடலை ஒரு முறை பாடுங்கள்.
சிவன் -
“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம்
செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.“
நக்கீரர் - இப்பாடலின் பொருள்.
சிவன் - புரியவில்லையா?
தலைவன் தலைவியின் கூந்தல் மணத்துக்கு இணையான மணம் வேறு மலர்களில் எங்கும் உண்டா? என்று தும்பிடம் வினவுவது போல இப்பாடலை அமைத்திருக்கிறேன்.
நக்கீரர் - பாடலின் உட்பொருள்?
சிவன் - பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயெ மணம் உண்டு என்பது.
நக்கீரர் - ஒருபோதும் இல்லை பெண்களில் கூந்தலுக்கு எக்காலத்தும் இயற்கையில் மணம் இல்லை. வாசனைத் திரவியங்களையும், மலர்களையும் தம் கூந்தலில் சூடுவதாலேயே அவர்கள் மணம் பெறுகின்றனர். அன்றி கூந்தலுக்கு இயற்கையில் ஏது மணம்?
சிவன் - ஓ உயர்ந்த குலப் பெண்களுக்கு?
நக்கீரர் - அவர்களுக்கும் தான்.
சிவன் - தேவ குலப் பெண்களுக்கு?
நக்கீரர் - நான் தினமும் வணங்கும் சிவனுக்கு அருகே அமர்ந்து காட்சியளிக்கிறாளே. உமையம்மை அவளுக்கும் கூட கூந்தல் செயற்கை மணம் தான்.
சிவன் - சினமுற்ற சிவன் தன் நெற்றிக்கண்ணைத் திறந்தவராக, நக்கீரா நன்றாப் பார் என்கிறார்.
நக்கீரர் - சற்றும் தன் கொள்கையில் பின்வாங்காதவராக நக்கீரர் எதற்கும் அஞ்சாது. “ நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே“ என்றுரைக்கிறார்.
சிவன் - சினம் அடங்காத சிவன் நக்கீரரை சுட்டெரித்துவிடுகிறார். பின்னர் பாண்டியன் சிவனிடம் வேண்டியதற்கிணங்க நக்கீரரை உயிர்ப்பிக்கிறார்.
நக்கீரர் - நக்கீரரும் பொற்றாமரைக்குளத்திலிருந்து எழுந்து வருகிறார்.
சிவன் ஆடிய திருவிளையாடல்களுள் ஒன்றாக இது அமைகிறது.

Sunday, 8 December 2024

வடக்கிற்கு இனி எப்போது மழை?

 08.12.2024 ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணி

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் தோற்றம் பெற்ற காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது பாணமையிலிருந்து தென் கிழக்கு திசையில் 548 கி.மீ. தொலைவில் காணப்படுகின்றது. இது அடுத்து வரும் நாட்களில் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 10.12.2024 அன்று இலங்கையின் கிழக்கு கடற்கரைக்கு சமாந்தரமாக (கிழக்கு மாகாணத்திலிருந்து 230 கி.மீ. தொலைவிலேயே அதன் மையம் காணப்படும்) வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் நாளை முதல் எதிர்வரும் 13.12.2024 வரை சில இடங்களில் மிதமான மழையும் சில இடங்களில் கனமழையும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக எதிர்வரும் 10, 11 மற்றும் 12ம் திகதிகளை உள்ளடக்கிய 72 மணித்தியாலங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 150 மி.மீ. க்கு கூடுதலாக திரட்டிய மழைவீழ்ச்சி பதிவாக வாய்ப்புள்ளது. 

இன்று இரவு முதல் வடக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது. 

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வளிமண்டல சாரீரப்பதன் மாற்றம் காரணமாக இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு குளிரான வானிலை நிலவும். 


அதேவேளை எதிர்வரும் 14.12.2024 அன்று இந்தோனேசியாவின் பண்டா அச்சே மாநிலத்திற்கு வடக்கே காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகும். இது சிறிய அளவிலான புயலாக மாறுவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன. இதுவும் ஆரம்பத்தில் மேற்கு, வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து பின்னர் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் வாய்ப்புள்ளது. தற்போதைய நிலையில் இதன் நகர்வுப் பாதையும், நகரும் திசையும் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படும் இடமும் அவசியம் கவனிக்கப்பட வேண்டியது.  இது தொடர்பான மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். 


-நாகமுத்து பிரதீபராஜா-

Saturday, 2 November 2024

கார்த்திகையின் மகத்துவத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் யாழ் பல்கலையின் கலைப்பீடத்தின் முன்மாதிரியான செயற்பாடு.

மரநடுகை மாதத்தினை முன்னிட்டு, கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால்  "கார்த்திகைப் பூக்கள்" எனும் பெயரில்  மர வளர்ப்புச் செயற்திட்டம் இன்று( 2024.11.01) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம்  யாழ்ப்பாணம் சன்மார்க்க மகா வித்தியாலயத்தில்   முதற் கட்டமாக மரநடுகை நிகழ்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், கலைப்பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் திரு. சு. கபிலன் ,  கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர் ,  கலைப்பீட மாணவர்கள், சன்மார்க்க மகாவித்தியாலய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்  எனப் பலரும் இவ் மர நடுகை வைபவத்தில் கலந்து கொண்டனர். 

மேற்படி நிகழ்வானது கார்த்திகையின் மகத்துவத்தை எமது அடுத்த தலைமுறைக்கும் கடத்தும் நோக்குடன் செயற்படுத்தப்படுகின்றது .


MR TAMILAN



நாளை முதல் எச்சரிக்கையாக இருங்கள்; வானிலை ஆய்வாளர் தகவல்

 10.12.2024 செவ்வாய்க்கிழமை இரவு 11.00 மணி.  தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது நன்கமைந்த காற்றழுத்த தா...